விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 5,001 விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் அருகே கருங்கல்பாளையத்தில் மக்கள் நல சேவை இயக்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த மாதம் அதாவது, ஆகஸ்டு 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5,001விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். அனுமதி அளிக்கவில்லையென்றால் தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வோம் என்று கூறினார். மேலும், மத்திய அரசு அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளை முடக்க முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பாஜகாவால் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-பா.ஈ.பரசுராமன்.