ஆவின் குடிநீர் பாட்டில் விரைவில் அறிமுகம் அமைச்சர் நாசர் அறிவிப்பு

ஆவின் நிறுவனம் மூலம் விரைவில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் தண்ணீர் பிளாண்ட் (R.O.Plant) உள்ளது. அங்கிருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளது.தற்போது தண்ணீர் பாட்டிலுக்கான லேபிள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். ½ லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளது. அதேபோல் அரசு விளம்பரங்கள் மற்றும் சிறப்பு நாள்கள் தொடர்பான புகைப்படம், விளம்பரங்கள் ஆவின் பாக்கெட்டுகளில் இடம்பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுமாறு திரைத்துறையினர் கேட்டு வருகின்றனர்.

இது தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் இறுதி முடிவை அறிவிப்பார். ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது 28 லட்சமாக அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

ஆவின் ½ லிட்டர் பால்பாக்கெட்  430 கிராம்தான் இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாற்று பால்பாக்கெட்கள் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்தது. இந்நிலையில், ஆவின் குடிநீர் பாட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version