செல்போனுக்காக 17வயது சிறுவன் கொலை அதிர்ச்சியூட்டும் சம்பவம்

சென்னை தண்டையார்பேட்டையில்  வட மாநில கட்டிடத் தொழிலாளி 17 வயது சிறுவன்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனுக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தண்டையார்பேட்டை பழைய வைத்தியநாதன் தெரு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநிலத்தை  சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில்  கொல்கத்தா வெஸ்ட் பெங்கால் முசிராத்பாத் பகுதியைச் சேர்ந்த  17 வயதுடைய சிறுவன் சுப்புரத் சர்தார் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வந்தான். பின், தண்டையார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உடன் தங்கி  கட்டிட வேலை செய்து வந்தான்.

இதில் சுப்புரத் சர்தார் இன்று கட்டிடப் பணிக்கு செல்லாமல்  படுத்து உறங்கி கொண்டு இருந்தான். தன்னுடன்  வேலை செய்யும் இரு வட மாநில இளைஞர்கள் காலையில் கட்டிடப் பணிக்கு சென்று விட்டு மாலையில் வந்து பார்த்தபோது  சிறுவன் சுப்புரத் சர்தார் கழுத்து  மற்றும் தலையில் வெட்டப்பட்டு  கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து  தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவுன் குமார் ரெட்டி  கொலை செய்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்க்கு செல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வேளச்சேரியில் இருந்து வந்த சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே இவர்கள் தங்கி இருக்கும் கட்டிடத்தில் 10க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணாமல் போயிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட செல்போன் காணாமல் போனது. இதில் ஒருவரை காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்தாக கூறினார்.

கொலை செய்யப்பட்ட கட்டிடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தபோது 2 பேர் ஏணி  போட்டு கட்டிடத்தில்  இருந்து  வெளியேறி செல்வது தெரியவந்தது.

இவர்கள் செல்போன் திருடுவதற்காக கட்டிடத்தில் குதித்து செல்போனை திருடும் பொழுது உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த சிறுவனிடம் எடுக்கும் போது  தகராறு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சிறுவனை வெட்டி கொலை செய்துவிட்டு செல்போனை எடுத்துச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்

 இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். செல்போன் திருடும் கும்பல் செல்போனுக்காக வடமாநிலத்தைச் சேர்ந்த 17 வயதான கட்டிட தொழிலாளியை வெட்டி கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version