எல்லோரும் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுங்கள் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

ஆகஸ்டு 13ம் தேதி முதல் ஆகஸ்டு 15ம் தேதிவரை அனைவரது வீட்டிலும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘சுதந்திர தின அமுத பெருவிழா’என்ற பெயரில் மத்திய அரசு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 13 முதல் ஆகஸ்டு 15ம் தேதிவரை தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசியக்கொடி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது “கொடி காத்த குமரன்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்கள்தான். அந்நியர் ஆட்சியில் நமது தேசியக்கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தவர். கொடிகாத்த குமரன் முதல் அனைத்து விடுதலை போராட்ட தியாகிகளையும் இந்த 75வது சுதந்திர தினநாளில் நினைவுக்கூர்வோம். அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் & பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்டு 13 முதல் ஆகஸ்டு 15 வரை தேசியக்கொடியை ஏற்றிவைத்து நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version