பேரளம் அருகே 15 வயது பள்ளி மாணவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவனுக்கு பள்ளியில் எழுத்துப்பயிற்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மன அழுத்தத்தில் இருந்த அவர் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு பெற்றோர்கள் மறுக்கவே, மேலும், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். நேற்று, நடைபயிற்சிக்கு செல்வதாக கூறி மாடிக்கு சென்ற அவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் கேட்டு பெற்றோர்கள் ஓடி வருவதற்குள் கருகிய நிலையில் கீழே சரிந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.