திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரனுக்கும் (37) கடந்த பிப்ரவரி மாதம் பெரியோர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், திருமணமான நாளிலிருந்தே, இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என திட்டி வந்துள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியான இந்துமதி மாமியாரின் துன்புறுத்தல் காரணமாக, தனது தாய்வீட்டுக்கு சென்றுள்ளார். கணவன் எப்படியும் தன்னை வந்து அழைத்துச் செல்வார் என இருந்துள்ளார். ஆனால் குமரன் வரவில்லை.
இதனால் மன உளைச்சல் அடைந்த இந்துமதி கடந்த ஜூலை 22ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது அக்காவிற்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், என் சாவுக்கு குமரனின் அம்மாதான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம் என்று கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதை கேள்விப்பட்டு வீட்டிற்கு ஓடிவந்து பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து நடந்து முடிந்த கோட்டாட்சியர் விசாரணையில், வரதட்சணை கொடுமை ஏதும் இல்லை. ஆனால் மாமியார் கொடுமை செய்து வந்தது உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் இந்துமதியின் மாமியார் சாந்தியை (60) கைது செய்து சிறையில் அடைத்தனர்.