தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர்,திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் கனமழை பெய்யும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
