ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக, ஒருவாரத்திற்கு முன்பாகவே திருவிழாக்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வசிக்கும் கேரள மக்கள் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில் பள்ளி,கல்லூரிகள் இயங்காது. அதற்கு பதிலாக வேறொரு நாளில் வேலைநாளாக கடைபிடிக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படாத நிலையில், தற்போது பண்டிகை களைக்கட்டியுள்ளது.

மேலும், ஓணம் பண்டிகையையொட்டி கேரளா செல்லும் ரயில்கள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. காரைக்கால்-எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,ஐதராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.அந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 250ஐ கடந்துள்ளது.

Exit mobile version