வலி நிவாரண மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் ஆன்லைன் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இணையதளங்கள் மற்றும் செயலிகள் அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகள், மருந்துகளை சப்ளை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் போதை கலாசாரம் பெருகுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், சட்டவிரோத செயலிகள் மூலம் மருந்து மாத்திரைகளை பெறுவோர் அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துவருவதாகவும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் கூறியுள்ளது.