திருமண நாளில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனியில் வசித்து வருபவர்கள் அருள்-ரேவதி தம்பதியினர். இருவரும் காதல் திருமணம் செய்து 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக வேலை பார்க்கும் அருள் (மதுவிற்கு அடிமையானவர்) தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் ரேவதி கோபித்துக் கொண்டு தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடி வேலை பார்த்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ரேவதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி அருள் அழைத்துள்ளார். அதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது உடைமைகளை தரும்படி ரேவதி கேட்டுள்ளார். சரி, உடைமைகளை தருகிறேன் என்னுடன் வா என்று அருள் அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அருள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அருளை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.