குழந்தை இல்லாததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பெற்றோரின் வீட்டிற்கு கீர்த்தனா சென்றுள்ளார். இந்நிலையில் அவரை பார்க்க அங்கு சென்றுள்ளார் பன்னீர் செல்வம். இருவரும் மாடியில் நின்று பேசி கொண்டிருந்த நிலையில், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை சரமாரியாக அறுத்துவிட்டு தப்பி ஓடினார். ரத்தவெள்ளத்தில் அலறியபடி மயங்கிய கீர்த்தனாவை பெற்றோர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் தலைமறைவான பன்னீர்செல்வத்தையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.