தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது வஞ்சகச் செயல் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது வஞ்சகச் செயல் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில், இந்தியாவின் மிக மூத்த மொழியாம் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது, கண்டனத்திற்குரிய வஞ்சகச் செயல்.
பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில்; இந்திய நாட்டின் தொல்லியல் சான்றுகளில் அறுபது சதவீதத்திற்கும் மேலான சான்றுகளைக் கொண்டு விளங்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும். இந்தப் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக் குரல் எழுப்புவோம்.
இந்தி மொழியில் கூடத் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர், மின்வாரியம் தொடர்பான தேர்வுகளில் தமிழ்மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது எப்படி என்ற நீதிபதிகளின் கேள்வி, எதிர்காலத் தலைமுறையின் நலன் காக்கும் வகையிலானது.
மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்புக்குத் துணை போகும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும் அம்பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.