இந்த வருட தீபாவளிக்கு எங்கு பட்டாசு வாங்கலாம்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடல் வளாகத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். பொது மக்களும் தீவுத்திடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பட்டாசுகள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த வருடம் கொரோனா அச்சு றுத்தல் காரணமாக பட்டாசு கடைகள் அமைக்கப்படாது என்று கருதி இருந்த நிலையில் நவம்பர் 6 ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது,

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட இருப்பதாகவும், கடைகள் அமைப்பதற்கான ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளதாகவும் தீவுத்திடல் பொருட்காட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியு ள்ளதாவது:-

சென்னை தீவுத்திடலில் இந்த ஆண்டு 30 முதல் 40 வரையிலான எண்ணிக்கையில், அதாவது பாதி எண்ணிக்கையிலேயே கடைகள் அமைக்கப்பட உள்ளன. கொரோனா அச்சம் காரணமாக இந்தாண்டு கடைகள் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கடைகள் அமைக்கப்படுவதற்கான ‘டெண்டர்’ உரிமம் கோரப்பட்டு உள்ளது. இந்த ‘டெண்டர்’ வருகிற 1-ந் தேதி இறுதி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து 6 மீட்டர் இடைவெளியில் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு பட்டாசு கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டியது இருக்கும். முக கவசம் அணியாமல் வருவோர் தீவுத்திடல் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் பட்டாசு கடைகள் அமைந்திருக்கும் வளாகத்துக்கு வரமுடியும்.

அதேபோல ‘ஹோல்டிங் பாயிண்ட்’ எனும் தனி இடம் ஏற்படுத்தப்பட இருக்கிறது. கூட்டமாக வருவோர் இந்த மையத்தில் அமரவைக்கப்பட்டு, 20 முதல் 40 நபர்கள் வரையில் குறிப்பிட்ட இடைவெளியில் பட்டாசு வாங்க அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல கடைகளில் கூட்டமாக பொதுமக்கள் திரளாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தயாராக இருக்கிறோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி தொடங்குகிறது. 15-ந் தேதி வரை பட்டாசு கடைகள் செயல்பாட்டில் இருக்கும். தீவுத்திடலில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகன நிறுத்தும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version