தைப் பொங்கலன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நேற்று கோலாகலமான நடந்தது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தன.
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை களம் இறக்கியுள்ளார். ஐராவதம் பகுதியை சேர்ந்த லோகதர்ஷனி என்ற அந்த மாணவி 8 வயதிலிருந்தே காளையை வளர்த்து வந்துள்ளார். போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த முறை வெற்றி பெற்ற பிறகு பரிசை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு மாடு பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தனது காளைய அழைத்து வந்தார் 2 வயது சிறுமி. இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.