குடோன் ஏலத்தில் ரூ 17 கோடி முறைகேடு! அதிகாரிகள் மீது புகார்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் டெண்டர் விடுவதில் 17 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மக்களின் காய்கறித் தேவையை பூத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது கோயம்பேடு மார்க்கெட். இங்கு குடோன்களை டெண்டர் அடிப்படையில் ஏலம் விடுவது வழக்கம். அதன்படி 4 ஆயிரம் சதுர அடி கொண்ட வெற்றுக் குடோன் ஒன்றிற்கான ஏலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளால் நடத்தப்பட்டது. அதிக பட்சமாக குபேரன் அண்ட் கம்பெனி 28 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டது. ஆனால் ஏலத்தை நடத்திய சி.எம்.டி.ஏ அதிகாரிகள், 3 விதிகளை சுட்டிக்காட்டி அதிக விலைக்கு கேட்டவர்களின் டெண்டர் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விட்டு, 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டவருக்கு குடோனை ஒதுக்கீடு செய்தனர். இவர் அதிகாரி ஒருவருக்கு வேண்டப்பட்டவர் என்று வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

விண்ணப்பதாரருக்கு சொந்தமாக வேறு கடைகள் இருக்கக் கூடாது என்ற விதி வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்று வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். சொந்தமாக காய்கறிக் கடை வைத்திருப்பவர்களுக்கு தான் குடோன் தேவைப்படும், சொந்தக்கடை கூட வாங்க இயலாமல் வாடகை கடையில் சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வரும் அந்த நபருக்கு 10 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஏலம் எடுத்தவரோ, பல ஆண்டுகள் காய்கறி வியாபாரம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து குடோனை ஏலம் எடுத்ததாக விளக்கம் அளித்தார். இதை ஏற்க மறுத்துள்ள மற்ற வியாபாரிகள் அரசுக்கு 17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version