கொரோனா சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது!!

ஜோலார்பேட்டையில் மருத்துவம் படிக்காமலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர்நேற்று  கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம்,, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளீனிக் தொடங்கி ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாகவும், கரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

ஆட்சியர் சிவன் அருள் அளித்த உத்தரவு பேரில், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் தலைமையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் மற்றும் மருத்துவக் குழுவினர், வருவாய் துறையினர் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி போன்ற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் வசித்து வரும் சம்பத் (43) என்பவர், பிளஸ் 2 வரை படித்து விட்டு தனது வீட்டின் அருகாமையில் மருத்துவமனை ஒன்று திறந்து, அங்கு 20-க்கும் மேற்பட்டோரை அனுமதித்து சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மருத்துவமனையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இன்று (செப். 3) நுழைந்து சோதனையிட்ட போது சம்பத் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி, 10-க்கும் மேற்பட்டோரை தனது மருத்துவமனையில் அனுமதித்து கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்து வருவது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்த நோயாளிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். பிறகு, சம்பத்திடம் விசாரணை நடத்தியபோது அவர் பிளஸ் 2 வரை படித்து விட்டு, மருந்து விற்பனையில் தனக்கு உள்ள முன் அனுபவத்தைக் கொண்டு ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

தனியார் மருத்துவமனைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

இதையடுத்து, ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர். அவர் நடத்தி வந்த கிளீனிக்குக்கு வட்டாட்சியர் மோகன் சீல் வைத்தார்.

Exit mobile version