சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும்… நல்லவர்களுடன் மட்டுமே கூட்டணி : கமல்ஹாசனின் ருசிகரமான பதில்கள் இதோ!!!

சட்டசபையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும் என்றும், வரும் தேர்தலில் நல்லவர்களுடன் மட்டுமே கூட்டணி என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Kamal Haasan

சென்னை தி.நகரில் மக்கள் நீதிமய்ய கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-

கேள்வி : சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா? அமைக்காதா?

பதில் : அதற்குப் பதில் சொல்லும் நேரம் இது இல்லை. நாங்கள் எங்கள் கட்டமைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் யாத்திரையின் முன்னேற்த்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள்தான் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி.

கேள்வி : தமிழகத்தில் 3-வது அணி அமையப்போகிறதா?

பதில் : அமைந்துவிட்டது என்கிறேன். இதுவே ஒரு அணி, நாங்கள் கூட்டணி வைப்பது என்பது நல்லவர்களுடன் அமையும். அப்படியானால் உங்கள் கட்சியைத் தவிர நல்லவர்கள் இல்லையா என்று கேட்கும்போது கண்டிப்பாக உள்ளது. அப்படி அவர்கள் கூட்டணி அமைக்கும்போது இது முதல் அணியாக இருக்கும். 3-வது அணியாக இருக்காது. நல்லவர்கள் வேறு கூட்டணியில் உள்ளார்கள். மனம் வெதும்பி இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வரவேண்டும் என்பதற்கான அழைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

கேள்வி : கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றால் பா.ஜ.க.வுடன் கூட்டணி உண்டா?

பதில் : நல்லவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருக்கிறேன்.

கேள்வி : அப்படியானால் பா.ஜ.க நல்லவர்கள் இல்லை என்கிறீர்களா?

பதில் : நல்லவர்கள் அனைத்துக் கட்சியிலும் உள்ளனர். அவர்கள் இங்கே வந்துவிடுங்கள் என்கிறேன். கட்சிகளுடன் கூட்டணி என்பது இந்த நேரத்தில் இவ்வளவு அவசரமாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்த நேரம் கூட்டணி பற்றிப் பேசும் நேரம் இல்லை.

கேள்வி : சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் யுக்தி என்ன?

பதில் : நேர்மைதான். அதை நாங்கள் தைரியமாகச் சொல்வோம். மக்கள் நீதி மய்யத்தின் யுக்தியும் நேர்மை. மற்றவர்கள் தைரியமாக எங்கள் யுக்தியும் நேர்மைதான் அரசியல் என்று சொல்லிப் பார்க்கட்டுமே. சமமான கட்சி, சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் எங்கள் யுக்தியும் நேர்மைதான் என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டுமே. எங்கள் அரசியல் பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியல்.

கேள்வி : தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி என, எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

பதில் : கள ஆய்வுகளின் சாதனை நிகழ்வுகளை வைத்துச் சொன்னதுதான். தன்னம்பிக்கையில் வந்த வார்த்தைதான். குறுகிய காலகட்டத்தில் 1 லட்சம்பேர் கட்சியில் சேர்ந்துள்ளார்கள். அது மக்கள் எங்களுக்குக் கொடுக்கும் சமிக்ஞையாக எடுத்துக்கொள்கிறோம்.

கேள்வி : மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வு எப்போது?

பதில் : நடந்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி : சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? அவர் குரல் ஒலிக்குமா?

பதில் : கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும்.

கேள்வி : நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?

பதில் : எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை நான் கையெழுத்திடும்போது உங்களுக்குத் தெரியும்.

கேள்வி : வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும்?

பதில் : மக்களுக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். மக்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.

கேள்வி : உங்களால் முதல்வர் ஆக முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில் : எனக்கு மாற்றம் முக்கியம். எங்கள் கட்சி அதை முடிவெடுக்கும். அவர்கள் முடிவெடுத்து அறிவித்தும் விட்டார்கள். அதைப் பின்பற்றி நடப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version