அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தருமபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. இதன்மூலம் தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடு பறிபோகும். வெளிநாட்டு, வெளிமாநில மாணவர்கள் அதிகமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விடுவர். அதே நேரத்தில் கல்விக் கட்டணமும் உயர்ந்துவிடும். அதேபோல நுழைவுத்தேர்வும் வந்துவிடும்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தொடர்பாக, துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு காலத் துணைவேந்தர் பதவியில் சூரப்பா சுதந்திரமாகச் செயல்படலாம். ஆனால், இருக்கும் விதிகளுக்கு உட்பட்டுத்தான் அவர் செயல்பட வேண்டும். அந்த விதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று அவர் கூறினார்.