பொறியாளர்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை முதல்வர் கைவிட வேண்டும்:கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழக அரசின் பொறியாளர்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தமிழக அரசின் பொறியாளர்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பொறியாளர்கள். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு குறைத்து வழங்குகிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது ஊதியத்தைக் குறைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழு அறிக்கை கொடுத்தும், 2013ல் குறைத்து வழங்கப்பட்ட ஊதியத்தையே இப்போதும் வழங்கி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

பொறியாளர்களின் கடும் பணி குறித்து கவலைப்படாமலும் எதேச்சதிகார முறையிலும் ஊதியக் குறைப்பு ஆணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியிருப்பதை கண்டிக்கிறேன். நீதிமன்றம் சென்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் பழிவாங்கப்படுவது தமிழக ஆட்சியாளர்களின் அராஜக போக்கையே வெளிப்படுத்துகிறது.
திறமையான பொறியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். எனவே, பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைத் தமிழக முதல்வர் உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version