தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிவிழா மாநாட்டில் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிவிழா மாநாடு இணையம் வழியாகச் செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் இரு அமர்வுகாக இந்த மாநாடு நடைபெற்றது.
காலையில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர் எம் அனிபா தலைமையில் நடைபெற்ற அறிவரங்கத்தில் சட்ட வல்லுனர்கள், கல்வியாளர்கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாலை அமர்வு பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. மதிமுக பொதுச் செயலாளர், வைகோ. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, சிபிஐ தலைவர் இரா. நல்லக்கண்ணு. சிபிஎம் தலைவர் டி.கே. ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் எம் அப்துல் ரகுமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழ் புலிகள் இயக்க தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் உரையாற்றினர்.
தமுமுக வெள்ளிவிழா மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஜனநாயக மதச்சார்பற்ற மாண்புகளைப் பாதுகாக்க உறுதி:
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளைத் தகர்த்து நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மையின் மாண்புகள், கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்ட பண்பாடுகளை மீறிச் செயல்பட்டு வருகின்றது. ஒற்றை மொழி. ஒற்றை சனாதன மதம், ஒற்றை அரசு என்று மத்திய அரசில் இருக்கும் ஒருவருக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் என்ற பாசிச போக்கில் மத்திய பாஜக அரசு சென்று கொண்டிருக்கின்றது. கடந்த 25 ஆண்டுகளாக தமுமுக ஜனநாயக ரீதியில் அனைத்து மக்களையும் அரவணைத்து உரிமைகளை வென்றது போல் தொடர்ந்து வீரியமாக நாட்டின் ஜனநாயக மதச்சார்பற்ற மாண்புகளைக் காப்பாற்றப் பாடுபடும் என்று இம்மாநாடு உறுதி எடுத்துக் கொள்கிறது.
- சமூக நீதி:
விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் பின்தங்கியும். பிரதிநிதித்துவம் இன்றியும் தவிப்பதை அரசுகள் நியமித்த பல்வேறு ஆணையங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. நீதியரசர் சச்சார் உயர்நிலைக் குழு. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ஆகியவை அளித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டுமென்றும் இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமுமுக தொடர்ந்து பாடுபடும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
- எளியோரின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்வி கொள்கை:
எளியோருக்குக் கல்வியை எட்டாக் கனியாக்கி சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்து கல்வி பெருமுதலாளிகளின் கடைச்சரக்காக மாற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) திரும்பப் பெற வேண்டும் என்றும் சமூக நீதியை மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் நிலைநாட்டும் கல்விக் கொள்கையே பின்பற்றப் பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
- சுற்றுச் சூழல் தாக்க வரைவு திட்டம்:
தமிழகம் உள்பட நாட்டின் சுற்றுச் சூழலைப் பாழாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு திட்டத்தைத் (EIA 2020) திரும்பப் பெற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
- வெறுப்புப் பரப்புரை:
தமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் ஹெச். ராஜா உள்ளிட்ட வன்முறையாளர்கள் வெளியிட்டு வரும் பயங்கரவாதக் கருத்துகளைத் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதும். அந்தக் கும்பலுக்கு கைக்கட்டி சேவகம் செய்வதும் வேதனையளிக்கின்றது. நச்சு கக்கிவரும் ஹெச் ராஜா உள்ளிட்டோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
- கொரோனா:
கொரோனா கொடுங்காலத்தில் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துச் செயல்படும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகள் மிதம்மிஞ்சிய கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழக அரசு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
- முழுமையான மது விலக்கு அமல்படுத்த வேண்டும்:
தமிழகத்தில் கொரோனா பரவுவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது மதுக்கடைகள் திறப்பது தான். படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று எடுத்த கொள்கை முடிவைத் தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கோருகின்றது.
- தமிழகத்தில் நல்லாட்சி மலர பாடுபடுவோம்:
தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஜனநாயக நெறிமுறைகளை வலுப்படுத்தும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் நல்லாட்சி மலர அயராது பாடுபட இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
9 சிறைவாசிகள் விடுதலை:
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கு மேலக சிறையில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் குறிப்பாகத் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சிறைவாசிகள், ஏழு தமிழர்கள் உள்ளிட்ட சிறைவாசிகள் அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கோருகின்றது.