திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூல் : மதுரை மணமக்கள் புது முயற்சி

திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூல் செய்த மதுரை மணமக்கள் புது முயற்சியாக செயல்படுத்தியுள்ளனர்.

மதுரை :

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காதுகுத்து, கல்யாணம் என எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் மொய் முக்கிய இடம் பிடிக்கும். மொய் வழக்கம் இன்றைய காலங்களில் குறைந்து வருவதால் அதனை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ஐடியில் பணிபுரியும் மதுரையை சேர்ந்த புதுமண தம்பதியினர் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளனர். பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் மொய் எழுதும் பகுதியில் மொய் எழுதுபவர்கள் டிஜிட்டல் முறையில் போன் பே, கூகுள் பே மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையில் ‘QR’ கோடுடன் கூடிய பத்திரிகையை வைத்திருந்தனர். திருமண விழாவிற்கு வந்தவர்கள் தங்களது மொய் தொகையை கூகுள் பே மூலமாக செலுத்திச் சென்றனர். “கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக அதிக அளவில் கூடும் கூட்டத்தை குறைக்கும் வகையிலும் அலைச்சலை தவிர்க்கும் வகையிலும் இது போன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

நேரில் வந்த மொய் பணம் செலுத்த முடியாதவர்கள் கூட கூகுள் பே, போன் பே மூலமாக மொய் பணத்தை எளிதாக செலுத்தலாம். இதன் மூலமாக யார் எவ்வளவு மொய் வைத்துள்ளனர். என்பதை தெரிந்துகொண்டு அவர்களுக்கு திரும்ப மொய் செய்யலாம்” என மணப்பெண் சிவசங்கரி தெரிவித்தார். மொய் செய்வதற்காக புதிய முயற்சியை எடுத்துள்ள மணமக்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். எல்லாம் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் மொய் செய்வதை டிஜிட்டல் மயமாக்கி அலைச்சலை குறைக்க வழிவகை செய்தது ஒரு வகையில் பாராட்டுதலுக்குரியதே என அவர்கள் கூறினர்.

Exit mobile version