பச்சைப்பட்டுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினர் கள்ளழகர்..!!

madurai kallagar festival

தங்கக் குதிரை ஊர்தியில் அடியர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 6 மணியளவில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று அடியவர்களின் கரவொலி மதுரை எங்கும் எதிரொலித்தது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 14-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அதையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் பக்தர்களின் ஆரவாரத்துடன் இன்று நடந்தது.

மதுரையை நோக்கி கடந்த 14-ம் தேதி தங்கக் குதிரையில் புறப்பட்டார் கள்ளழகர். நேற்று எதிர்சேவை முடிந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையுடன் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் அடியோருக்கு காட்சியளித்தார்.

அதையடுத்து இன்று அதிகாலையில் தங்கக்குதிரை பூட்டிய வண்டியில் கள்ளழகர் வைகை ஆற்றுக்கு வந்தார். சரியாக காலை 6.30 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி அடியவர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்து, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.

இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையோரத்திலும், ஆற்றுக்குள்ளும் கூடினர். அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கிய பக்தர்கள், அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து ஆரவாரம் செய்தனர்.

அதை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. அதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 14-ம் தேதி கருட வாகனத்தின் எழுந்தருளும் அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் கொடுக்கும் வைபவம் நடக்கிறது. இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் காட்டும் நிகழ்வை தொடர்ந்து, ஏப்ரல் 18-ம் தேதி பூப்பல்லக்கில் கள்ளழகர் அழகர்கோவில் புறப்படுகிறார்.

Exit mobile version