கொரோனாவை வென்று காட்டிய ஏழை தொழிலாளி!!

75 வயது முதுமை, கால் முறிவு, நீரிழிவு நோய் இவ்வளவு பலவீனங்கள் இருந்தும் கொரோனாவை வென்று காட்டிய ஏழை தொழிலாளி.!

 சென்னை ,மயிலாப்பூர் ஜி. என். தெருவில் வசித்து வரும் முதியவர் ராஜகோபாலன்( வயது 75).இவர் மனைவி ராணிபாய் (வயது 68) இருவரும் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள் .

இக் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் இப்பெரியவர் ஈட்டிவந்த சொற்ப வருமானம்தான். 

 ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். தினமும் சைக்கிளில் சென்று வருவார். 

அண்மையில்  வாகனம் மோதி ஒருகால் பாதத்தில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை எடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். நீரிழிவு நோயும் இருந்ததால் விபத்தால் ஏற்பட்ட காயம் ஆற தாமதம் ஏற்பட்டது. 

வாரம் ஒருமுறை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று காயத்திற்கும் நீரிழிவு பிரச்சினைக்கும் சிகிச்சை பெற்று வந்தார். 

எப்படியோ  இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த 03.07.20 அன்று  108 ஆம்புலன்ஸ் மூலம் இவரை  மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். 

 சென்னை, அண்ணா சாலையில் உள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, டவர் 3 ன் 6 வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தார். 

மருத்துவமனைக்கு சென்று 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இவருக்கு என்ன நேர்ந்ததோ என்று அச்சத்தில்  அக்கம்பக்கத்தினர் இருந்தனர். வயது முதிர்ந்த இவருடைய துணைவியார் தன் கணவரை நினைத்து  கவலையுடன்  அலைபாய்ந்து கொண்டிருந்தார். 

இந்த நிலையில், கால் முறிவுக்காயம், நீரிழிவு நோய், 75 வயது முதுமை இத்தனை பலவீனங்கள் இருந்தும்  கொரோனாவை வென்று, வெற்றி வீரராக நேற்று இரவு வீடு திரும்பினார். 

மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம்  இவர் வந்திறங்கிதும்  அக்கம் பக்கம் வசித்தோர்  மகிழ்ச்சி அடைந்தனர். 

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்  குறித்து இவரிடம் கேட்டபோது “நல்ல முறையில் கவனித்துக் கொண்டார்கள், தொடர்ந்து வீட்டில் உட்கொள்வதற்காக மருந்துகள் தந்துள்ளார்கள் என்று கூறினார். 

3 வேளை சத்தான உணவு வழங்கியதாக  தெரிவித்தார். செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பற்றி அவர் பேச முற்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை திசை நோக்கி கும்பிட்டார்.

Exit mobile version