மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அரசு செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அரசு செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினருடான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில், அதிக அளவு இருந்த கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த ஆலோசனைகளை ஏற்று, அரசு எடுத்த சரியான நடவடிக்கைகளின் காரணமாக, படிப்படியாக இந்த நோய்த் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் அதிக நபர்கள் வசிக்கிற காரணத்தினால், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த நோய்த் தொற்று எளிதாக பரவி விடுகிறது. ஆகவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலமாக இந்த நோய்த் தொற்று குறைக்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் சுமார் 25,532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 500 முதல் 600 வரையிலான முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல 20,000 பணியாளர்களை வைத்து சென்னை மாநகரத்தில் வீடு, வீடாகச் சென்று, ஒரு வீட்டிற்கு 10 முதல் 12 முறை சென்று, மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்றவை இருக்கின்றதா என்பதைக் கேட்டறிந்து, அப்படி அறிகுறி தென்படும் பட்சத்தில், அவர்களை பரிசோதனைக்குட்படுத்தி, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதனால், நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியே வராமல் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கின்ற இடத்திற்கே சென்று விநியோகிக்கபபட்டு வருகிறது.

சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 119 பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்தி, இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை நிலையங்கள் உள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகள் செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கின்றது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114. அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, மருத்துவ நிபுணர்கள் அளித்த ஆலோசனைகளை பின்பற்றி, நமது மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததன் விளைவாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,72,883 ஆக உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. மருத்துவ நிபுணர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் அரசு சிகிச்சை அளித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணமடையச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களின்படி அரசு செயல்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

Exit mobile version