வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பா.ஜ.க.விற்கு நல்லது : அமைச்சர் ஜெயக்குமார்

வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பா.ஜ.க.விற்கு நல்லது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Minister Jayakumar

சென்னையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கை, களப்பணிகள் காரணமாக சென்னை உள்பட தமிழகம் வரை கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். ஆனால், இரண்டாவது அலை, மூன்றாவது அலையையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. அதனால் அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு பொதுமக்களின் உயிரைக் காக்கும் தலையாயக் கடமை.

அந்தக் கடமையை உணர்ந்துதான் இந்த நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என உணர்த்தியுள்ளோம். அதனால்தான் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அவர்கள் உணர்ந்து பொதுமக்களுக்காக, பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் வேல் யாத்திரையைப் பா.ஜ.க. கைவிடுவது அவர்கள் கட்சிக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. தடை என்பதை அரசு அவர்களுக்குத் தெரிவித்துவிடும்.

அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி., எவிடென்ஸ் ஆக்ட் உள்ளது. சட்டமில்லாமல் நாடு இல்லை. சட்டம் உள்ள நாட்டில் நாம் அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் உண்மையில் ஜனநாயகப் பண்பு. ஜனநாயகத்துக்கு உற்றவர்கள் என்று சொல்ல முடியும்.
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இது பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாகச் சட்டத்தை மதிக்க வேண்டும்.

ஏழு பேர் விடுதலை வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆளுநர் உச்ச நீதிமன்றக் கருத்தைக் கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version