நடிகர் கமல்ஹாசன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கமல்ஹாசன் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில் நடிகர் கமல்ஹாசன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார்.கட்சியை ஆரம்பித்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதால் எதை எதையோ பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைகள் நடந்து கொண்டு இருக்கிறது.இந்த வழக்குகள் தொடரப்பட்ட காலம் முதல் சூரப்பா தொடர்ந்து நான் நியாயமானவன், அப்பழுக்கற்றவன், நான் விசாரணையை எதிர் கொள்வேன் என்று கூறிக்கொண்டு வருகிறார்.மேலும் மதுரையில் ஒருவரை தயார்செய்து வழக்கு போட வைத்து, அதில் தன்னையும் இணைத்து கொண்டுள்ளார்.
மதுரைக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.தான் நியாயமானவன் சூரப்பா கருதினால் சென்னையில் வழக்கு தொடரப்பட்டு இருக்கலாம்.மடியில் கனம் இருப்பதால் தான் அவர் வழியில் பயப்படுகிறார். பேராசிரியர்கள் நியமனத்தில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் துணைவேந்தர் நியமனத்திற்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
துணைவேந்தர் நியமனத்திற்கு தேடுதல் குழுவை அமைப்பது மட்டுமே தமிழக அரசின் பணி. இதில் தேடுதல் குழு தான் விண்ணப்பங்களை பெற்று, 3 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. இதை எதுவும் தெரியாமல் நடிகர் கமல்ஹாசன் அரசு மீது ஏதேனும் புகார் கூறி வருகிறார்.உண்மை நிலையை அறிந்து அந்த அறிக்கையை அவர் சொல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.