நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளி்த்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
36 வருவாய் மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் ஏறத்தாழ 5,000 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டு, உணவு, குழந்தைகளுக்குப் பால் பவுடர், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
இத்தகைய வலுவான புயலில் உயிர்ச்சேதம் ஏற்படாமல் வரலாற்று சாதனையை முதல்வர் படைத்திருக்கிறார். 100 சதவீத மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். 100 சதவீத மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சாலையில் நடந்து வருபவர் மீது மரம் விழும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை தவிர்க்கத்தான் மக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. திருவள்ளூரில் மண் சுவர் இடிந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த சேதாரங்களும் இல்லை.
அறிவுப்பூர்வமாக புயலை கையாள்வதில் இந்தியாவுக்கே முதல்வர் பாடம் கற்றுத்தந்திருக்கிறார். தற்போது, குடிசை வீடுகள் 89, ஓட்டு வீடுகள் 12, மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் ஆடு-மாடுகள் 26, சேதமடைந்த 380 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. ஒருமணிநேரத்தில் மரங்கள் அகற்றப்பட்டு தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது. சாலையில் தேங்கியுள்ள நீர், வீடுகளுக்குள் புகுந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கஜா, ஓகி போன்ற புயல்களிலிருந்து பெற்ற பாடங்களால் இதனை உயிரிழப்பின்றி கடந்திருக்கிறோம். அனைத்து நீர்நிலைகளும் இன்று நிரம்பியிருக்கின்றன. இரவு முழுவதும் கண்விழித்து முதல்வர் மக்களை பாதுகாத்துள்ளார். இந்த புயலை கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.சென்னையில் அநேக இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆய்வு மேற்கொள்வதைப் பார்த்துவிட்டு, தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடி, பின்னர் கிடைக்காமல் வெறும் தரையில் நடந்து பார்வையிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சோகமாக நடந்துகொண்டே போகிறார்.
மக்கள் அச்சம்கொண்டிருந்த வேளையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு முதல்வர் நேரடியாக சென்றது புதிய வரலாறு. புயலால் பயிர்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், நிவாரண விதிகளுக்கு உட்பட்டு, காப்பீடு, இழப்பீடு வழங்குவதற்கான உரிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அவர் கூறினார்.