மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது குறித்து சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது. மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, தொழிற்சங்கங்கள் திரும்பப் பெற்றால், ஐந்து நாள்களுக்குள் 10 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் கொடுக்கப்படும். தொழிற்சங்கங்கள் வழக்கை வாபஸ் பெற்றால், 10 ஆயிரம் பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவர். மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. போராட்டம் நடத்திக் கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென கூறியுள்ளார்.
முன்னதாக, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பாக பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்த உத்தரவில், மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியா்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தமானது ஒரே தவணைத் தொகை செலுத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். விதி மற்றும் நிபந்தனைக்கு உடன்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளா் உறுதி செய்வார்.
பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியா் நலன் சார்ந்த விஷயங்களோடு, ரூ.1 கோடி 80 லட்சத்து 88 ஆயிரம் என இதற்கான தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மூலம் பணியமர்த்தப்படும் இந்த உத்தரவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், கண்டனமும் எழுந்திருந்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.