அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுததியுள்ளார்.
சென்னை:
அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுததியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழல் விசாரணை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் துணைவேந்தர் பதவியில் தொடருவது கேலிக்கூத்து.
சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அ.தி.மு.க. அரசு? இந்த 9 மாதங்கள் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன?
பதவிநீக்காதது ஏன்?
ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகம்.தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது என்று துணைவேந்தர் சூரப்பா மீதும், அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர் மீதும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும், முதல்வரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்?
டிஸ்மிஸ் செய்க:
இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு? ஊழல் புகார்களுக்கு உள்ளான துணைவேந்தரை உடனடியாக சஸ்பென்ட் செய்வதுதான் நேர்மையான நியாயமான விசாரணைக்கு வழிவிடும்.
ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.