தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அராஜகங்கள், அந்த மாவட்டம் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? அல்லது தனித் தீவாக மாறி விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இளைஞர் கொலை:

அப்பாவி இளைஞரைப் பறிகொடுத்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் கொலையை மறைக்க அரங்கேற்றப்படும் கொடும் நிகழ்வுகளாகவே தெரிகின்றன.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும், தூத்துக்குடி அமைதியின்மையின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை:

கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மக்களும் போராடி வருகின்ற நிலையில், அதுபற்றி அரசு கண்டுகொள்ளாமல், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை, நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை ‘ரவுடியிசம்’ மூலம் அச்சுறுத்தத் துணை போவது, செல்வம் கொலையில் மேலும் பிடிபடாமல் உள்ள உண்மையான குற்றவாளிகள் வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது.

எனவவே, இந்தக் கொலை வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகளையும் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தியவர்களையும், உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

50 லட்சம் நிவாரணம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு உடனடியாக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version