மருத்துவ கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் பெற நடவடிக்கை தேவை:முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டே பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

சென்னை:

மருத்துவ கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டே பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமை தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.

அத்தீர்ப்பின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் பற்றி ஆராய ஒரு குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

தமிழகம் முன்வைக்கவில்லை:

அ.தி.மு.க. அரசும், இந்த ஆண்டே இந்த இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி – அடுத்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் மத்திய அரசு – மாநில அரசு – இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த போது, 22.9.2020 அன்று கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசின் பிரதிநிதி முன் வைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறது மத்திய அரசு.
மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டைப் பெறுவதில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடமும், செயல்பாடும் மிகவும் கவலையளிக்கிறது.

நடப்பாண்டு :

பதவிக்காக – ஊழலுக்காக, “நீட் தேர்வில்” தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது இந்த இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது. அ.தி.மு.க. அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
எனவே, மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் முதல்வர் விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version