தமிழ்நாட்டில் இந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமையன்று ஆறாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்காக வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஐந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு வருகிறது.
மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னையில் இன்று(அக்டோபர் 18) நடமாடும் பல் மருத்துவத்தை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமையன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” மக்களை தேடி மருத்துவம் போன்று, மக்களை தேடி பல் மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ல் பள்ளிகள் திறந்தவுடன், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் பள்ளி மாணவர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும். 2006-11 காலகட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச பல் பரிசோதனை செய்யப்பட்டு,பிரஷ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தடுப்பூசி முகாம் குறித்து பேசிய அவர், ”தொடர் பண்டிகைகள் காரணமாக நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழ்நாடு துரிதமாக செயல்படுவதை பார்த்து, ஒன்றிய அரசும் தொடர்ந்து நமக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. நம்மிடையே 53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது….நேற்று, நியூசிலாந்து நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக செய்தி ஒன்றை பார்த்தேன். நாம் ஒரேநாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.
அதன்படி, இந்தவாரம் இதுவரை இல்லாத வகையில் 50 ஆயிரம் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மாமிசம் சாப்பிட முடியாது; மது குடிக்க முடியாது என்று யாரோ பரப்பிய வதந்தியை நம்பி பலரும் அன்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்து விடுகின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. இருப்பினும், அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது. அதனால், வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிற ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான்காம் கட்ட தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேரும், ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் 11 லட்சம் பேரும் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி இன்னும் 30 லட்சத்து, 42 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டும். அதனால், 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமை, இரண்டாவது தவணை செலுத்த வேண்டியவர்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற புதன்கிழமை நடைபெறும். அந்தவகையில், ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் ஒரு வெற்றி பெற்ற முகாமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.