நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் கொள்கை முடிவு-அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு :

ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.அப்பொழுது அவரிடம் வருகிற 5 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வந்தால் அதற்கான தகவல் வெளியிடப்படும் என்றார்.

தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை விட அதிக மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் கடைசி வரை நடைபெறும் என்றும் பெற்றோர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க படையெடுத்து வருகிறார்கள் என்றும் கூறினார்.மேலும் நீட் தேர்வு குறித்து நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு. நாளை 238 மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகிறார்கள்.

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

Exit mobile version