நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!!

சென்னை, நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த 14-ந் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கொரோனா தொற்று குறைவு:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, கொரோனா தொற்று பரிசோதனைகள் அதிகரிக்கவும், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிய 12,000 களப்பணியாளர்கள், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த தனிமைப்படுத்தும் மையங்கள், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடிசைப் பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்களைக் கொண்டு சிறப்பு திட்டங்கள், சென்னை சமூக களப்பணித் திட்டத்தின் மூலம் வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் வைரஸ் தொற்று நாள்தோறும் படிப்படியாக குறைந்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும், 1,520 கிலோமீட்டர் நீளத்திலான சாலை பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். அம்ருத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் ரூ.4661.47 கோடி மதிப்பிலான 11 குடிநீர் திட்டப் பணிகளையும், ரூ.3831 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 12 பாதாள சாக்கடை திட்ட பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ரூ. 7098.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 251 பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் 2020-21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடல்நீரை குடிநீராக்கும் பணிகள்

நெம்மேலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1259.38 கோடி மதிப்பீட்டிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகளை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்டப்பணிகள், பெரிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆகியவற்றில் நிலை குறித்து கேட்டறிந்து ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வங்கி கடன் இணைப்பு, சுயஉதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version