வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பி்ல் கூறியிருப்பதாவது:-
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த பகுதி இன்று உருவாகியுள்ளது, இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள மத்திய பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்த 48 மணி நேரத்தில் இது தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து நவம்பர் 25 -ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நோக்கி வர வாய்ப்புள்ளது.
கன மழை எச்சரிக்கை
நவ.23 அன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24-ந் தேதி நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் காற்றின் வேகம் 40- முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் சில நேரம் 60 கிமீ வேகத்தை எட்டும். நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிமீ வேகத்தில் 60 கிமீ வேகத்தை எட்டும்.
23-ந் தேதி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தமிழக கடற்கரையில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிமீ வேகத்தில் சில நேரம் 65 கி.மீ. வேகத்தை எட்டும். 24-ந் தேதி மற்றும் 25-ந் தேதி காற்றின் வேகம் 55 முதல் 65 கிமீ வேகத்தில் சில நேரம் 75 கிமீ வேகத்தை எட்டும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
இன்று முதல் நவம்பர் 25 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலில் இருந்து வெளியேறும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கடற்கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.