அக்.1 முதல் பள்ளிக்கு வரணுமா.. அதெல்லாம் வேணாம்.. முதலமைச்சர் அறிவிப்பு

அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைக்கப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, நோய்த்தொற்று பரவலின் வேகம் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

இதனிடையே, மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி, அக்டோபர் 1ம் தேதி முதல்
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வந்து பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

மாணவர்களிடையே தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது போன்ற பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக
முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆலோசனை பெற போக முடியாது. பள்ளிகளும் திறக்கப்படாது என்று உறுதியாகி உள்ளது.

இதனிடையே மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Exit mobile version