அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணியில் பிரச்சினை இல்லை – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணியில் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இந்த நிலையில், இன்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. அமைத்த கூட்டணி தொடர்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்களின் கட்சியின் கருத்தை அவர் கூறியிருக்கிறார். இதனைக் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, லட்சியம் உண்டு. அதனை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சூழ்நிலையில்தான் அ.தி.மு.க. இருக்கிறது.

தேர்தலின்போதுதான் கூட்டணி குறித்துச் சொல்ல முடியும். இப்போது கூட்டணியில் பிரச்சினை இல்லை. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய உழைப்போம். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா காலத்தில் இருந்த பலத்துடன் அ.தி.மு.க. தற்போதும் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லலாம். அந்தக் கருத்தைச் சொல்வதாலேயே நாங்கள் பலவீனமடைந்துவிட்டதாகக் கருத முடியாது. எங்களின் தலைமையில்தான் கூட்டணி அமையும். சின்ன சின்னப் பிரச்சினை இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அவை சரியாகிவிடும் என அவர் கூறினார்.

Exit mobile version