தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
rain

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இன்று தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரை மேலூரில் 6 செ.மீ. மழை பதிவாகியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version