SeithiAlai

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவிருக்கின்றனர். நகர்ப்புற, ஊரக பகுதியில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவக்கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்துவார் என தெரிகிறது.

நீர்நிலைகளின் உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும், தமிழக அரசின் சார்பில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மழை பொழிவு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கான நிவாரண முகாம்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்கவும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version