இலவசம் இல்லை, ரேஷன் கடையில் கிலோ அரிசி ரூ.3 – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு, ரேஷன் கடையில் கிலோ அரிசி 3 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதியாக நாடு முழுவதும் எந்தவொரு ரேஷன் கடையிலும், ரேஷன் பொருட்களை பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை தேசிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று தொடக்கி வைத்தார். தொடர்ந்து 3 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களையம் வழங்கினார்.

தமிழகத்தில் இன்று முதல் 32 மாவட்டங்களிலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 16ஆம் தேதியில் இருந்தும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புலம்பெயரும் முன்னுரிமைக் குடும்பஅட்டைதாரர்கள் பயோமெட்ரிக் தகவல் உறுதிப்படுத்தல் முறையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.

இதுதொடர்பான சுற்றறிகையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 1 கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், 1 கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் பொருட்களை பெற ஏதுவாக உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version