50 ஆயிரம் காளைகளை அறிவித்த பா.செங்குட்டுவன்.. விருது வழங்கி கௌரவித்த செந்தில் தொண்டமான்..!

தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் உலகப் புகழ் வாய்ந்தது. தமிழர்களின் தொன்மைகளில் ஒன்றாக சிறந்து விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உலகம் முழுவதும் சிறந்த ரசிகர்கள் உண்டு.

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர் பகுதிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ரசிகர்கள் ஒருபுறம் இருக்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் வரலாற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அறிவிப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறார் பா. செங்குட்டுவன். கடந்த 15 வருடங்களாக பல மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பல மணி நேரங்கள் தொடர்ந்து காளைகள் அறிவிப்பு பணியை செய்துள்ள பா.செங்குட்டுவன் முக்கியமான ஜல்லிக்கட்டு போட்டியில் 9 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து காளைகள் அறிவிப்பு பணியில் ஈடுபட்டு சாதனை படைத்திருக்கிறார். இவருடைய சாதனைக்கு விருது வழங்க வேண்டுமென ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் சார்பாக தீர்மானம் முன்மொழியப்பட்டது.

 இவருக்கு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பாக அதன் கௌரவ தலைவர் செந்தில் தொண்டமான் , ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநில தலைவர் ஒண்டிராஜ், மூத்த ஆலோசகர் S.ராஜா ஆகியோர் சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கி கௌரவித்தனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஜல்லிக்கட்டு குறித்து பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வெற்றியும் பெற்றது. மேலும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தில் ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள், உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

 இந்த சங்கத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது, காளைகள் வளர்ப்பதை ஊக்குவிப்பது, பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த ஏற்பாடுகளை செய்வது, மாடுபிடி வீரர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் மற்றும் மாடுபிடி வீரர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நல திட்டங்களை செயல்படுத்துவது, ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது காயமுற்ற மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Exit mobile version