குடும்ப வறுமையால் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த கொடுமை…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை, குடும்ப வறுமை காரணமாக பெற்றோரே 1 லட்ச ரூபாய்க்கு விற்ற அவலம் அரங்கேறியிருக்கிறது.
New Born Baby

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹாஜிம் முகமது, ஆமினா பேகம் தம்பதியினர். இந்தத் தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்னதாக நான்காவதாக மீண்டும் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.

குழந்தைப் பிறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அருகில் வசிப்பவர்கள் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, தம்பதியினர் சாக்குப் போக்குச் சொல்லி குழந்தையைப் பார்க்க விடவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கப் பக்கத்தினர், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார், சைல்டு லைன் அமைப்பினரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினர், தம்பதியினரிடம் விராலிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது ஆமினா பேகத்திடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறார். தங்களது குடும்பம் ஏழ்மை காரணமாக, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையில்லாத தம்பதியினருக்கு, கண்ணன் என்ற இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்குக் தங்களது பெண் குழந்தையை விற்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியினரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார், இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியினரிடமும், இடைத்தரகர் கண்ணன் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுக்குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் கூறும்போது, குழந்தையை பணத்துக்காக வாங்குவதும், விற்பதும் சட்டப்படி குற்றம் என்றும், குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் சட்டப்படி தத்தெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். சட்டத்தை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குடும்ப வறுமையைப் போக்க, பெற்றக் குழந்தையையே ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Exit mobile version