பட்டினப்பாக்கத்தில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பத்து கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலைப் பகுதி அனைத்து மீனவக் கிராம பஞ்சாயத்துச் சபை சார்பில், முள்ளிக்குப்பம்–சீனிவாசபுரம் லூப் சாலை சந்திப்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கடற்கரையோர மீனவக் குடியிருப்புகளிலும், படகுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்றி எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

அரசாணையைத் திரும்பப் பெறக் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்–சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கும் அரசாணை எண் 564-ஐ தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பது மீனவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதியும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பட்டினப்பாக்கத்தில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாததால் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதாக மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

“மீனவர்களுக்காக வாங்கப்பட்ட நிலம்”

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள நிலப்பகுதி, மீனவர்களின் மறுவாழ்வு மற்றும் நீண்டகாலக் குடியிருப்புத் தேவைகளுக்காக 1957-ஆம் ஆண்டு அரசால் கையகப்படுத்தப்பட்டது என்று மீனவக் கிராம பஞ்சாயத்துச் சபை கூறியுள்ளது.

குறிப்பாக, சர்வே எண்கள் 4592 மற்றும் 4593-க்கு உட்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது, மீனவ மக்களுக்கு அரசு அளித்த உறுதிமொழிக்கு எதிரானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம்

புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைந்தால், பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அதிகரித்து மீனவர்கள் கடற்கரையைப் பயன்படுத்துவது பாதிக்கப்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

படகுகளை நிறுத்துதல், மீன்பிடி வலைகளை உலர்த்துதல், பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்தல் மற்றும் கடலுக்குச் சென்றுவருதல் உள்ளிட்ட அன்றாடத் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியை, 2019 கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பின்கீழ் மீனவர்களின் பாரம்பரியக் குடியிருப்புப் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் மற்றொரு கோரிக்கையாகும்.

திட்டம் ஆரம்ப நிலையிலேயே உள்ளது

புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும், திட்டம் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும் தமிழக அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் திட்டத்துக்கான அரசாணையே எதிர்காலத்தில் தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதிக்கும் எனக் கூறும் மீனவர்கள், அரசாணையை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியறுத்தியும், பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதியை மீனவ மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version