கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்விகளையும், அதை தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளையும் அரசு அலட்சியமாக கடந்து செல்வது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிடாத துறைமுக கட்டுமானம் மற்றும் தடுப்பனைகளால் கடந்த ஒருமாதத்தில் மூன்று மீனவரை இழந்து தவிக்கும் குமரி மீனவ சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஆண்டுதோறும் துறைமுகத்தில் கடல்சீற்றம் அதிகரிப்பதும், ராட்சச அலையில் மீனவர்கள் சிக்கி பலியாவதும் வழக்கமான வேதனைதரும் நிகழ்வாக மாறியுள்ளது.

கேரளாவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட துறைமுக வாயிலால், கடல் சீற்றம் குறைக்கப்பட்டு இது போன்ற உயிரிழப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அரசு தூத்தூர், நீரோடி மற்றும் தேங்காய்பட்டினம் உட்பட மீனவ கிராமங்களில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு செவிசாய்த்து, இதுவரை 19 மீனவர்கள் இறப்பிற்கு காரணமான தேங்காய்பட்டின துறைமுகம் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள துறைமுக நுழைவாயிலை குறைந்தபட்சம் 300 மீட்டர் வரை விரிவாக்கம் செய்வதுடன், இந்தியாவில் அதிக கடல் சீற்றம் கொண்ட பகுதிகளான நீரோடி முதல் கன்னியாகுமரி வரை, கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த, “தூண்டில் வளைவு” திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமான பொழிமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து மீனவ சமுதாய மக்கள் புறக்கணிக்க படுவதை இனி ஒருகாலும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version