மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு… தமிழ்நாடு அரசுக்கு பறந்த உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு, தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்க வில்லை எனக் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019ம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுவுக்கு அக்டோபர் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Exit mobile version