மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? ராமதாஸ் கேள்வி

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

சென்னை:

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 21 நாட்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மாணவர்கள் நலன் விஷயத்தில் ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

ஐயம்:

அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பதுதான், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வதற்குக் காரணமாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலில் சட்டம் கொண்டு வரவில்லை. கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாதங்களிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், அதற்குள்ளாக சட்டம் நிறைவேற்ற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி ஜூன் 15ம் தேதி அமைச்சரவை கூடி ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.

தயக்கம் ஏன்?

ஆனாலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார். தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசரச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை யோசனை தெரிவித்தது.
அதையேற்று அவசர சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த ஜூலை 15 ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைத்தது. அதற்குப் பிறகும் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தயங்குவது ஏன்?

எனவே, தமிழக ஆளுநர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version