அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலி:4-ம் வகுப்பு மாணவிக்கு மோடி பாராட்டு

அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலியை உருவாக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் வசித்து வருபவர் அர்ச்சுனன் பிரதீப். இவர் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.


கேரளாவை சேர்ந்த இவருக்கு அபர்ணா என்ற மனைவியும் இந்திராஅர்ஜூன் (9) என்ற மகளும் உள்ளனர். இந்திரா அர்ஜுன் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று விடுமுறையானதால் தனது வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் தொடர்ந்து படித்து வருகிறார் இந்திரா.

இதனிடையே இவர் விலங்கியல், வேதியியல் உள்பட பாடங்களை அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலி காட்சிகளாக உருவாக்கி அதை தனது ட்விட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுவரை அவரது வீடியோக்களை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்த்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பான சிந்தனைத்திறன், ஞாபக சக்தியுடன் உரிய விளக்கத்துடன் பாடம் நடத்தி வருகிறார் இந்திரா.
புலி, சிங்கம், யானை, பாம்பு, கரடி, சிறுத்தை, நரி உள்பட பல்வேறு மிருகங்களின் தன்மை பற்றியும் அவற்றின் வாழ்விடம் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறை குறித்து அனிமேஷன் முறையில் வீடியோவில் விளக்கி கூறியுள்ளார் இந்திரா.
இந்த வீடியோக்கள் பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வீடியோக்களை பிரதமர் பார்த்துள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இணைய தளத்திலும் இந்திரா உருவாக்கியுள்ள அனிமேஷன் பாட திட்ட வீடியோ வெளியாகியுள்ளது.இதையடுத்து அகில இந்திய அளவில் அவர் பிரபலமாகி விட்டார்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திரா, ஏராளமான பரிசு, பதக்கம், விருதுகளையும் பெற்றுள்ளார்.

Exit mobile version