சென்னை சிறப்பு புறநகர் ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் பயணம் செய்ய அனுமதி அளித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பொதுபோக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், மக்கள் அதிகமாக பயன்படுத்தும் புறநகர் மின்சார சேவையும் ரத்து செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே புறநகர் மின்சார ரெயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், அன்றாடம் ரயில்களில் வேலைக்கு சென்று வந்தவர்களுக்கு, மின்சார ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மின்சார ரெயிலில் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுக்குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கீழ்கண்ட துறைகளில் வேலை செய்பவர்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
- அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.
- தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்.
- அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள்.
- சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.
- குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்.
- பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்களில் பயணம் செய்ய விரும்புவர்கள், அவர்கள் பணிபுரியும் அலுவலத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும் என்றும், கூட்ட நெரிசலை பொருத்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.