ராஜராஜசோழன் சமாதி சீரமைப்பு குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவை அருட்பணி அறக்கட்டளை செயலர் தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜராஜ சோழன் சமாதி
தமிழகத்தில் பல்வேறு சிறப்புமிக்க கோவில்களை கட்டிய பெருமை வாய்ந்தவர் ராஜராஜசோழன். இவர் சோழ மன்னர்களில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தவர். சிதம்பரம் நடராஜர் கோவில் உட்பட பல்வேறு சிவ ஆலயங்கள் மற்றும் சிறப்புமிக்க கோவில்களை கட்டி குடமுழுக்கு செய்தவர். ராஜராஜசோழனின் உடல் தஞ்சை பூதலூரில் புதைக்கப்பட்டு, அந்த இடத்தில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. கைலாசநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் ராஜராஜசோழன் சமாதி தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அந்த இடத்தில் ராஜராஜசோழனுக்கு சிலை மற்றும் மணி மண்டபம் கட்ட எங்கள் அறக்கட்டளைக்கு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
நடவடிக்கை என்ன? மும்பையில் மன்னர் சிவாஜியை மக்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பெருமை மிக்க மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை. ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.