கொரோனா பாதிப்பால் பலியானவர்களில் உடலை அடக்கம் செய்து வரும் கீழக்கரை இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
ராமநாதபுரம் :
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது அந்தக்காலம் தற்போது கொரோனா என்றால் கொடியவனும் மிரளுவது இந்த காலம்.அந்த அளவுக்கு உலகமெங்கும் மக்களை வாட்டி வதைத்து உயிர் பலி வாங்கி வருகிறது கொரோனா. இந்த நோய் தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்தியாவில் மத்திய,மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் ஓரளவு கொரோனா நோய் பாதிப்பு கட்டுப்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டுகாரருக்கு கொரோனா பாதிப்பு வந்து விட்டாலே அந்த தெருவில் வசிக்க கூடியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் உள்ளனர். அந்த அளவுக்கு கொரோனாவின் கொலைவெறி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர். கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இறந்து விடும் போது கொரோனா அச்சத்தில் அவரது நல்லடக்கத்திற்கு யாரும் சொல்வது கிடையாது. பல இடங்களில் பாதுகாப்பான முறையிலும் அடக்கம் செய்வது கிடையாது.
இதற்கு தீர்வு காணும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை இலவசமாக நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து நல்லடக்கம் செய்து வரும் கீழக்கரையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அசாருதீன்,நசுருதீன், பர்னாஸ், பாசித்,ஆரிப்,பசல் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கீழக்கரையை சுற்றியுள்ள கும்பிடு மதுரை,நத்தம், மேலமடை, சாயல்குடி, முதுகுளத்தூர்,சிக்கல்,இதம்பாடல், ஏர்வாடி, போன்ற 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அவரவர் மத சம்பிரதாயப்படி இலவசமாக நல்லடக்கம் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக உள்ளது.எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத நிலையில் சமூக சேவையாக இந்த பணியை இவர்கள் செய்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இதுவரை இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 13 பேரின் உடல் இவர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.